Flipkart Offer

Wednesday, October 4, 2017

மனதை பலப்படுத்தும் வரிகள் - M.S. உதயமூர்த்தி

மனதை பலப்படுத்தும் வரிகள் - M.S. உதயமூர்த்தி

💥
🔵திரு. உதயமூர்த்தி அவர்களின் பல்வேறு கட்டுரையிலிருந்து தொகுக்கப்பட்டுகோர்வையாக்கப்பட்ட கட்டுரை:
🔵"தற்போது போட்டிகள் நிறைந்த சூழ்நிலையில் ஒரு மனிதன் தன்னம்பிக்கை இழக்க ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், நாம் எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது. நம் மனமானது தோல்வியையே, கஷ்டத்தையே மீண்டும், மீண்டும் சிந்திக்க வைத்து பய உணர்வை, பெருக்குகிறது. இப்படிப்பட்ட சிந்தனைகளில் நாம் திளைத்து, அதிலேயே மூழ்கி இருந்தால் கவலையும், துக்கமும் தான் மிஞ்சும்; அதிகமாகும். இப்படிப்பட்டதோல்வி/ ​நெருக்கடிகள் எல்லாருடைய வாழ்விலும் நடக்கக் கூடியது என்று எண்ணிக் கொண்டு மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும்.

"
கடமையைச் செய். முடிவைப் பற்றி, பயனைப் பற்றி கவலைப்படாதே!'. இந்த வாக்கியத்தை விட நல்ல வாக்கியத்தை கஷ்டப்படுபவர்களுக்கு நாம் சொல்ல முடியாது.
🔵தோல்விக்கான குற்ற உணர்வுகளும், கவலைகளும் நமது நேரத்தை வீணடிக்கின்றன. நமது சக்தியை வடித்து விடுகின்றன. நமது எண்ணங்கள் தன் சுதந்திரத் தன்மையை இழந்து இதனால் முடக்கப்படுகின்றன. இத்தகைய எண்ணங்களும், நினைவுகளும் சிறிது நேர வருத்தத்தில் இருந்து, சித்தபேதம் வரை நம்மைக் கொண்டு சென்று விடுகின்றன. நமது உளுத்துப் போன பல சமுதாயக் கோட்பாடுகளும் நம்மைக் குற்ற உணர்வுடன் வாழ வைக்கின்றன.

சூழ்நிலையைத் தெளிவாக ஆராய்வதன் மூலம் இந்த வேண்டாத மன உளைச்சலைப் போக்கிக் கொள்ளலாம். பல தற்கொலைகள், அறியாமையால், தன்னம்பிக்கையும், அது தரும் துணிவும் இல்லாமையால் நடக்கின்றன. தன்னபிக்கை பெற நல்ல மருந்து நம் பிரச்னை சம்பந்தமான காரியத்தில் இறங்குவது தான். 
நாம் முயற்சியில் ஈடுபட்டால் கவலை மறந்து விடும்.

🔵அப்போது மாறுபட்ட புதிய எண்ணங்கள் மனதில் தலைதூக்கும்; புதிய எண்ணங்கள் வழிகாட்டும். இதில் முக்கியமான காரியம், " மனதை தளர விடக்கூடாது! " என்பது தான். துணிந்தவனின் மனதிற்கு ஆற்றின் ஆழம் முழங்கால் அளவு தான் என்பர். ஆறு மிக ஆழமாக இருந்தாலும் நாம் நீந்திப் போய் விடலாம் என்பதுதான் அவர்களது லட்சியமாக இருக்க வேண்டும்.

ஷேக்ஸ்பியர் எழுதுகிறார்: கடலைப் போன்றது தான் வாழ்க்கை. மேடு, பள்ளம் நிறைந்தது. புயல் நெடுநேரம் வீசப் போவதில்லை. இரண்டு மரங்களைக் கீழே தள்ளியவுடன் புயல் தானே நின்று விடும் என்ற எண்ணத்துடன் செயலில் இறங்கினால், நிலைமை மாறும். சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும், துணிவும் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை.

🔵வாழ்வில் நல்ல விஷயங்கள் அதிகமா, கெட்ட விஷயங்கள் அதிகமா என்று அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தினர். நம்மால் சமாளிக்க முடியாத கெட்ட சம்பவங்கள் மற்றும் தோல்விகள் எல்லாம் வாழ்வில் குறைவாகத்தான் இருக்கின்றன என்று கண்டுபிடித்தனர். வாழ்வில் தோல்வி ஏற்படுவது சாதாரணம். மனம் தளர்ச்சி அடைவது இயல்பு. அந்தத் தளர்ச்சி அடைந்த காலங்களில் நாம் ஆற, அமர யோசிக்க வேண்டும். அப்போது நமக்குப் புது வழிகள் தென்படும். தோல்வியை சமாளிப்பது எது? சளைக்காத மனம் தான்! தோல்வியை வெற்றிக் கண்டது எது? விடாமுயற்சி தான்!

🔵உலகின் மகத்தான சாதனைகள் எல்லாம் சாதாரணத் திறமை படைத்தவர்களாலேயே பெரும்பாலும் சாதிக்கப்படுகிறது. அவர்களது வெற்றிக்குக் காரணம் விடாமுயற்சி தான். எதைக் கண்டும் சளைக்காத மனம். தொடர்ந்து அந்தக் காரியத்தில் மீண்டும், மீண்டும் ஊடாடும் மனப்பக்குவம்.

வாழ்க்கையின் முழுமுதற் கொள்கை தான் என்ன? செயல், தொண்டு, பணி, கருமம், உழைப்பு என்று பிறந்த உயிர் வாழத் துடிக்கிறது. அது ஜீவத் துடிப்பு. அந்த ஜீவத் துடிப்பு நம் எல்லாருள்ளும் இருக்கிறது. வாழ்க்கை ஒரு இனிய அனுபவம்; உலக உண்மைகளை அறிந்து கொள்ளும் அறிவு. மனிதன் தேவனாகும் முயற்சி தான் வாழ்க்கை! நாம் ஒவ்வொருவரும் ஒரு காரணத்திற்காகச் சில திறமைகளுடன் படைக்கப்பட்டிருக்கிறோம். நமது திறமைகளைத் தெரிந்து கொள்வோம். இந்த உலகம் முன்புபோல் இல்லை. வெகுவேகமாக மாறி வருகிறது. அதை உணர்ந்து அதற்கு ஈடு கொடுக்க நாம் கற்றுக் கொள்ளாவிட்டால் அது நம்மை விட்டு விட்டு, நம்மைப் பழங்குடி மக்களாக்கி விட்டுப் போய் விடும்.

🔵இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், ஒன்றை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர். மனித மனத்தின் - மனித மூளையின் - அபிவிருத்தியில்தான் எதிர்காலம் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்து செயல்படுகின்றனர்.
வாழ்வு ஒரு சீட்டு விளையாட்டுப் போல. நமது சீட்டுக்களை நாம் தேர்ந்தெடுக்க முடிவதில்லை; கட்டுப்படுத்த முடிவதில்லை. நம் கையில் சில சீட்டுக்கள் வந்திருக்கின்றன. இவை தானே வந்திருக்கின்றன என்று நொந்து கொள்ளாமல், அலுத்துக் கொள்ளாமல் இருப்பதை வைத்துச் சிறப்பாக விளையாடும் திறமை தான் வாழ்க்கை.
🔵எடிசன் என்ற விஞ்ஞானி மின் விளக்கைக் கண்டுபிடித்தார் என்று எல்லாருக்கும் தெரியும்; ஆனால், அந்த மின் விளக்கை உருவாக்க எடிசன் எத்தனை முறை முயன்று தோற்றுப் போனார் என்பது தெரியாது! நூற்றுக்கணக்கான முறை பரிசோதனை செய்து, செய்து அவர் தோற்றுப் போனார்! எப்படி வெற்றி பெற்றார்? பொறுமையால் தான்! தோல்வி அவரை அசைத்து விட வில்லை.

அந்த நிலையில் நாம் சிறிது நேரம் அல்லது ஒரு 10 நிமிடம் எதுவும் சிந்திக்காமல் அமர்ந்திருந்தோமானால் கொஞ்சம், கொஞ்சமாய் திடீரென ஒரு எண்ணம் எழும்பும். அதை தான் உள்ளொலி, உள் உணர்வு எனக் கூறுகின்றனர். அதன்பின், மனதில் தெளிவு ஏற்பட்டு புதிய வாழ்க்கை வாழத் துவங்குவீர்.


நன்றி 🙏

No comments:

Post a Comment

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக ...

வணக்கம் நண்பர்களே நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக சுயபிரகடனம் (நான் என்பதற்க்கு பதிலாக நாம் / அனைவரும் / எல்லோரும் என ம...